இந்தியா

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் லீலா சாம்சன் பதவி விலக முடிவு

செய்திப்பிரிவு

மத்திய திரைப்படத் தணிக்கை (சென்சார்) வாரியத் தலைவர் லீலா சாம்சன், தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தேரா சச்சா தேவா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'மெசஞ்சர் ஆஃப் காட்' என்ற திரைப்படத்தை வெளியிட திரைப்படத் தணிக்கை முதன்மை தீர்ப்பாயம் (FCAT) அனுமதி அளித்துள்ளதையடுத்து லீலா சாம்சன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'மெசஞ்சர் ஆஃப் காட்' படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனாலும், எழுத்துப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இது தணிக்கைத் துறையை கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இருப்பினும், எனது ராஜினாமா முடிவு இறுதியானது. இது குறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறைக்கும் தெரிவித்துவிட்டேன்.

தணிக்கை வாரிய உறுப்பினர்கள், அதிகாரிகள் மத்தியில் ஊழல் மலிந்துவிட்டது. மேலிட அழுத்தமும், தலையீடும் அதிகரித்துவிட்டது. தணிக்கை வாரிய உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்த 9 மாதங்கள் ஆகிவிட்டன. மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகமோ போதிய நிதி இல்லை என்கிறது. இப்படிப்பட்டச் சூழலில்தான் வாரியம் இயங்கி வருகிறது.

மேலும், தணிக்கை வாரிய தலைவர் உள்பட பல உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிந்துவிட்டது. புதிய அரசும் வாரியத்தை மாற்றியமைக்க தவறுவிட்டது. ஆனால், அண்மைக்காலமாக தணிக்கைத் துறையில் அதிகரித்துள்ள அமைச்சக தலையீடு வாரியத்தின் தன்மையை சீர்குலைத்துவிட்டது. ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மேலும் அதில் திளைக்க வழிவகை செய்துவிட்டது. எனவே நான் ராஜினாமா செய்கிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT