இந்தியா

ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கு: அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க திமுக பொதுச் செயலர் அன்பழகன் மனு

பிடிஐ

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணை அமர்வில் திமுக பொதுச் செயலர் கே.அன்பழகன் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கின் உண்மையான விவரங்களை வெளியிடாமல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பவானி சிங் செயல்படுவதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் பவானி சிங்கை நீக்கி அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று நடைபெற்ற விசாரணையில் பவானி சிங்கிடம் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியாக பதில் அளிக்க முடியாமல் பவானி சிங் திணறியதால் நீதிபதி அதிருப்தி அடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார் வாதிட்டபோது, 7.9.1995-ல் நடந்த வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண செலவுகள் அனைத்தும் நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் செய்ததே என்றும், ஜெயலலிதா தரப்பில் செய்யப்பட்ட செலவுகளை ஊதிப்பெருக்கி வழக்கில் சேர்த்துள்ளனர் என்று கூறினார்.

இதனையடுத்து நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பில் கூறப்படும் புகார்களுக்கு உங்கள் தரப்பு பதில் என்ன? 1991-ஆம் ஆண்டுக்கு முன்னால் ஜெயலலிதா சினிமாவில் நடித்துப் பெற்ற வருமானத்தை வழக்கில் சேர்த்துக் கொண்டீர்களா? முதல்வராக இருந்த அப்போதைய காலக்கட்டத்தில் ஜெயலலிதா மாதம் 1 ரூபாய் சம்பளம் பெற்று 5 ஆண்டுகளில் 60 ரூபாய் ஊதியமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறதே, அவரது ஊதியத்திற்கும் அவர் சேர்த்ததாக கூறப்படும் சொத்துகளுக்குமான விகிதாச்சாரம் என்ன? என்று கேள்விகளை தொடுத்தார்.

இதற்கு பவானி சிங், சினிமாவில் சம்பாதித்தது பற்றி ஜெயலலிதா தரப்பினர்தான் கூற வேண்டும் என்றும், சொத்துக்குவிப்பு விகிதாச்சாரம் குறித்து தனக்குத் தெரியாது என்று பதில் அளித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி குமாரசாமி, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அரசு வழக்கறிஞரான நீங்கள் வாசிக்க வேண்டும் என்று கடுமையாக கூறினார்.

SCROLL FOR NEXT