தனித்தனியாக பிரிந்து கிடக்கும் ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரையும் தம்முடன் இழுக்கும் முயற்சியில் ஜனதா கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி கிடைத்தது. இதை தொடர்ந்து நடந்த ஹரியாணா, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அக் கட்சிக்கு கிடைத்த வெற்றி, ஜனதாவில் இருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் நிலைமையை ஏற்படுத்தி விட்டது.
இதனால், சமாஜ்வாதியின் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பலரும் மீண்டும் ஒன்றாக இணையும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியையும் இணைக்கும் முயற்சியும் நடக்கிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் ராஷ்ட்ரீய ஜனதா தள தேசிய நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அங்கு முலாயம் சிங் மற்றும் மாயாவதி கட்சிகள் கைகோர்ப்பது அவசியம். அதேபோல், மேற்கு வங்கத்திலும் பாஜக வளர்வதைத் தடுக்க காங்கிரஸுடன் மம்தா இணைய வேண்டும். இவர்கள் தங்கள் கட்சிகளையே ஒன்றாக இணைத்தால் மிகவும் நல்லது. அப்படி இல்லை எனில், குறைந்தபட்சம் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன’’ என்றனர்.
ஐக்கிய ஜனதா தளம் செயலாளர் கே.சி.தியாகி, சமாஜ்வாதியின் கிரண்மாய் நந்தா ஆகியோர் மம்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு, மம்தா மற்றும் மாயாவதி உடனடியாக சம்மதிக்கவில்லை. இருப்பினும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் கண்டிப்பாக முன் வருவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.