இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) இடைக்கால தலைவராக சைலேஷ் நாயக் (61) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது புவி அறிவியல் அமைச்சக செயலாளராக உள்ளார்.
நாயக் ஒரு மாதத்துக்கு மட்டும் இஸ்ரோ தலைவராக செயல் படுவார். அதன்பிறகு அவரே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட லாம். அல்லது வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. இதுவரை இந்தப் பதவி யில் இருந்த கே.ராதாகிருஷ்ணன் நேற்று ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரோடாவில் உள்ள எம்எஸ் பல்கலைக்கழகத்தில் படித்து புவியியல் வல்லுநரான நாயக், கடந்த 2000-வது ஆண்டு வரை இஸ்ரோவில் பணியாற்றினார். அதன் பிறகு ஹைதராபாத்தில் உள்ள தேசிய கடல் தகவல் சேவை மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
முன்னதாக, இஸ்ரோ தலைவர் பதவிக்கு சதீஷ் தவாண் விண்வெளி மைய இயக்குநர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் மற்றும் விண்வெளி செலுத்து மைய இயக்குநர் கிரண் குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.