அரசியல் கட்சிகள் இனிமேல் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளி வீச முடியாது. அந்த இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவது எப்படி, அதற்கான நிதி ஆதாரங்கள் எந்தவகையில் திரட்டப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டுதலின்பேரில் தேர்தல் அறிக்கை தொடர்பாக புதிய நெறி முறைகளை தேர்தல் ஆணையம் இப்போது வகுத்துள்ளது.
கடந்த 2013 ஜூலை 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இலவச அறிவிப்புகள் தேர்தல் நடைமுறையின் ஆணி வேரை அசைப்பதாக உள்ளன, இதைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அரசியல் சாசனத்தின்படி தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்களை அறிவிப்பதில் தவ றில்லை. ஆனால் இதுபோன்ற இலவசங்கள் வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் தேர்தலின் தூய்மை களங்கப்பட்டுவிடக்கூடாது, அதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 7-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய பெரும்பான்மை பிரதிநிதிகள், தேர்தல் வாக்குறுதிகள் தங்களது அடிப்படை உரிமை என்று வாதிட்டனர்.
நடத்தை விதிகள்
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு தலின்படி புதிய நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது.
“அரசியல் கட்சிகள் மக்கள் நலத்திட்டங்களை கட்சிகள் அறிவிப்பதில் தவறு இல்லை. அதேநேரம் நடைமுறை சாத்திய மில்லாத இலவச அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் வெளியிடக்கூடாது” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவது எப்படி, அதற்கான நிதி ஆதாரங்கள் எந்தவகையில் திரட்டப்படும் என்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.
இதுதொடர்பான வரைவு அறிக்கை அனைத்துக் கட்சிகளுக் கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது.