வைகுண்ட ஏகாதசியை முன் னிட்டு நேற்று காலை திருப்பதி கோயிலில் உற்சவரான மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் தங்கத் தேரில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று காலை உற்சவரான மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் தங்கத் தேரில் 4 மாட வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வைகுண்ட ஏகாதசி, புத்தாண்டு ஆகிய இரண்டும் ஒரே நாளில் வந்ததால் பக்தர்கள் கூட்டம் திருப்பதியில் அலைமோதியது. சாதாரண பக்தர்களுக்கு முன் னுரிமை அளிக்கும் வகையில் தேவஸ்தானத்தினர் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு 2,474 விஐபிக்களுக்கு தரிசன ஏற்பாடு களை செய்தனர். பின்னர் அதிகாலை 3.40 மணி முதல் சர்வ தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர் களுக்காக 5,500 அறைகள் ஒதுக்கப் பட்டிருந்தன. மேலும், 6 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு வினியோகிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டன.
புதன்கிழமை இரவு முதலே பக்தர்கள் குவிந்ததால், நேற்று காலை சுமார் 2 கி.மீட்டர் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில பக்தர்கள் காயமடைந்தனர். இவர்களை திருமலையில் உள்ள அஸ்வினி தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், மத்திய அமைச் சர் சுஜனா சவுத்ரி, தெலங்கானா மாநில அமைச்சர் மஹீந்தர் ரெட்டி, திருப்பதி எம்.பி. வரப்பிரசாத் மற்றும் தெலுங்கு திரைப்பட நகைச் சுவை நடிகர் பிரம்மானந்தம் ஆகியோர் ஏழுமலையானை நேற்று தரிசித்தனர்.