முன்னாள் முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதா மீதான வழக்கை விசாரிக்க கூடுதல் எஸ்.பி.க்கு அதிகாரம் இல்லை. எனவே அவரது விசாரணையை ஏற்கக்கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் வாதிட்டார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 5-ம் நாளாக நேற்று நடைபெற்றது.
அப்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி வாதிடும்போது, “ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை அப்போதைய திமுக அரசு சிறப்பு வழக்காக கருதியது. எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி. நல்லம்மநாயுடு தலைமையில் 12 தலைமை விசாரணை அதிகாரிகள், 50 காவல் ஆய்வாளர்கள், 150 போலீஸார் கொண்ட பெரிய குழுவை ஏற்படுத்தியது.
பழிவாங்கும் நடவடிக்கை
ஜெயலலிதா மீதான அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக அவசர மாக விசாரித்து, சாட்சிகள் ஜோடிக் கப்பட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது. ஒரு சாதாரண சொத்துக்குவிப்பு புகாரை விசாரிக்க இத்தனை பெரிய குழு தேவையில்லை. அரசி யல் ரீதியாக பழிவாங்குவதற்காக தகுதியற்ற காவலர்களைக் கொண்டு, வழக்கு விசாரிக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் புதைந்திருக்கும் அரசியலை உணர முடியும்.
அதிகாரம் இல்லை
மேலும் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான புகாரை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., எஸ்.பி. ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. கூடுதல் எஸ்.பி.யான நல்லம்ம நாயுடுவுக்கு அந்தப் புகாரை விசாரிக்கும் அதிகாரம் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறை சட்டம் 17-ம் பிரிவுக்கு எதிராக அவர் இவ்வழக்கை விசாரித்துள்ளார். ஆதலால் அவரது விசாரணையை ஏற்கக்கூடாது” என்றார்.
அதற்கு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “இந்தப் புகாரை கீழ் நீதிமன்றங்களில் எழுப்பினீர்களா?” என்றார்.
இதற்கு பி.குமார் பதிலளிக்கும் போது, “கீழ் நீதிமன்றங்களில் இது தொடர்பாக முறையிட்டோம். ஆனால் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனிடையே தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்குவந்த திமுக, கூடுதல் எஸ்.பி.யாக இருந்த நல்லம்ம நாயுடுவுக்கு திடீரென இரு முறை பதவி உயர்வு வழங்கியது.
அதேபோல 2006-ம் ஆண்டு விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு ஓய்வு பெற்றார். ஆனால் அவருக்கு திமுக அரசு பதவி நீட்டிப்பு வழங்கியது. இதனால் நல்லம்ம நாயுடு முற்றிலும் உண் மைக்கு புறம்பானவற்றை கொண்டு இவ்வழக்கை ஜோடித்துள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு ஹரியாணா முதல்வர் பஜன் லால் மீதான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதாவது முதல்வர் பதவியில் இருந்த பஜன் லால் மீது எஸ்.பி. பதவிக்கும் குறைந்த அந்தஸ்து கொண்ட காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். இந்த முதல் தகவல் அறிக்கையை ஏற்காமல் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுபோல் ஜெயலலிதா மீதான வழக்கிலும் தகுதிக் குறைவான, கூடுதல் எஸ்.பி.யின் விசாரணையை ஏற்கக்கூடாது. அவருடைய விசாரணையை ஏற்பது லஞ்ச ஒழிப்புத்துறை சட்டம் 17, 18, 19 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. அதேபோல் அப்போதைய தமிழக அரசு விதிகளை மீறி நல்லம்ம நாயுடுவுக்கு கொடுத்த பதவி உயர்வும் சட்டத்துக்கு எதிரானது” என்றார்.
ஜெ. வழக்கறிஞர் மாற்றம்
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் உணவு இடைவேளைக்கு முன் எழுந்து, ‘‘நாளை (இன்று) சனிக்கிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால், நாங்கள் சென்னைக்கு செல்லவேண்டும். அதனால் பிற்பகல் வழக்கு விசாரணையை தொடராமல் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும்” என்றார்.
அதற்கு நீதிபதி குமாரசாமி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம், “ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் போகட்டும். நீங்கள் உங்களுடைய வாதத்தை தொடர்கிறீர்களா?” என்றார். அதற்கு பவானி சிங், ‘‘எதிர்தரப்பு வாதத்தை முடித்தபிறகு, அரசுத் தரப்பு வாதத்தை தொடங்குகிறேன்” என்றார்.
அப்போது பி.குமார், “எங்களுடைய வாதத்தை திங்கள் கிழமை தொடர்கிறோம். உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞரும், கூடுதல் சொலிசிடர் ஜெனரலு மான எல். நாகேஸ்வர ராவ் ஆஜராகிறார்” என்றார். இதைய டுத்து வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமாருக்கு பதிலாக எல்.நாகேஸ்வரராவ் ஆஜராவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பழைய ஊழியர்கள் மீண்டும் நியமனம்
ஜெயலலிதா மீதான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கேட்கும் ஆவணங்களை ஊழியர்களால் உரிய நேரத்தில் எடுத்து தரமுடியவில்லை. எந்த ஆவணம் எங்கே உள்ளது என்று தெரியாமல் உயர்நீதிமன்ற ஊழியர்கள் தடுமாறுகின்றனர். இதனால் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் நீதிபதி குமாரசாமி கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் ஆர்.கே.தேசாயிடம், “பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் முன்பு பணியாற்றிய ஊழியர்களை, உயர்நீதிமன்றத்தில் பணி அமர்த்துமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்தராக இருந்த பிச்சமுத்து, அலுவலக உதவியாளர் யோகா உள்ளிட்ட 3 பேர் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிச்சமுத்து கடந்த 2004 முதல் பணியாற்றி வருவதால் ஜெயலலிதா வழக்கில் அனைத்து ஆவணங்கள் குறித்தும் அறிந்துவைத்துள்ளார். 2012-ல் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரது பணிக்காலம் வழக்கு முடியும் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.