இந்தியா

புற்று நோய், போதை பிரச்சினை பஞ்சாப் தேர்தலில் எதிரொலிக்குமா?

ஆர்.ஷபிமுன்னா

பஞ்சாபின் மக்களவை தேர்தலில், புற்று நோயும் போதை மருந்தும் முக்கிய பிரச்சனைகளாக முன்னிறுத்தப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளிலும் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பஞ்சாப் இளைஞர்கள் நம் இராணுவத்தின் சிறந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. ஆனால், தற்போது இவர்கள் போதை மருந்துகளுக்கு அடிமையாகி சீரழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அங்கு இதுவரை ரூ.800 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றி உள்ளதே இதற்கு சான்று.

கடந்த வாரம் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பஞ்சாபின் ஐந்து நகரங்களில் பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சார மேடையில் போதை பொருட்களின் பேச்சே பிரதானமாக இருந்தது. அதேபோல், இம் மாநிலத்தில்தான் கோதுமை அதிக அளவில் உற்பத்தியாகிறது. இந்நிலையில் கோதுமை பயிருக்கு போடப்படும் கலப்பட மற்றும் அளவுக்கு மீறிய பூச்சி மருந்துகள் உட்பட பல்வேறு காரணங்களால் புற்று நோய் பரவி வருகிறது. இதனால் பஞ்சாபின் மால்வா பகுதி விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் புற்று நோய் சிகிச்சைக்காக ரூபாய் ஒன்றரை லட்சம்வரை நிதியுதவி அறிவித்துள்ளார். ஆனால், புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் இங்கு போதுமான அளவுக்கு இல்லை. இதனால், அருகிலுள்ள டெல்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனைகளுக்கு புற்று நோயாளிகள் செல்ல வேண்டியுள்ளது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பட்டிண்டாவில் மீண்டும் போட்டியிடும் அகாலி தளம் கட்சியின் எம்பியான ஹர்சிம்ரத் கௌர் பாதல் கூறுகையில், ‘‘மத்திய அரசின் உதவிகள் எங்களுக்கு முறையாகக் கிடைக்காமையால் இங்கு, நலத்திட்டங்களை எளிதாக அமல்படுத்த முடியவில்லை. புற்று நோய்க்காக மாநில அரசு மூன்று சிறப்பு மருத்துவமனைகளை அறிவித்தது. அதில் ஒன்றுக்கு மட்டும்தான் அடிக்கல் நாட்டு விழா நடத்த முடிந்தது.

மற்றொரு பிரச்சினையான போதை மருந்து கடத்தலைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது’’ எனப் புகார் கூறுகிறார்.

இதற்கு பதில் தரும் வகையில், 'தி இந்து'விடம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுக்பால் கேஹரா கூறுகையில், ‘‘முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்வீர் சிங் பாதல் ஆகிய இருவரும் அரசியல் தீவிரவாதிகள். பஞ்சாப் வந்த மோடி, பட்டிண்டாவில் பேசியபோது, அங்குள்ள புற்று நோயாளிகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை’’ என்றார்.

இதுகுறித்து 'தி இந்து' நாளிதழிடம் பஞ்சாப் கலாச்சாரப் பாதுகாப்பு அமைப்பின் சமூக சேவகரான பூபேந்தர்சிங் சாந்து கூறுகையில், ‘குடிநீர் மற்றும் காற்று வழியாக வேகமாகப் பரவி வரும் புற்று நோய் மற்றும் இளைஞர்களிடையே பரவி வரும் போதைப்பழக்கம் ஆகியவற்றுக்கு பயந்து பல பஞ்சாபிகள் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புகின்றனர்’ எனக் கூறுகிறார்.

SCROLL FOR NEXT