நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு நடைமுறைகளைத் தொடங்கியுள்ள மத்திய அரசு முதற்கட்டமாக 36 சுரங்கங்களை பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது.
36 சுரங்கங்களில் ஒன்று ஸ்டீல் தொழிற்துறைக்கும் மீதி மின்சாரத் துறைக்கும் ஒதுக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து நிலக்கரித்துறை செயலர் அனில் சுவரூப் கூறும்போது, “இன்று 36 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுக்கான அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளோம். தேவையைப் பொறுத்து கூடுதல் சுரங்கங்கள் இடம்பெறும். இது குறித்த தேவைக்கான கோரிக்கைகள் வைக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறோம்.
ஏற்கெனவே நிலக்கரி சுரங்கங்களை வைத்திருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அதனை அரசிடம் சமர்பித்து புது சுரங்கங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான ஒதுக்கீட்டு ஒப்பந்தம் அடுத்த மாதம் இறுதியில் நிறைவு செய்யப்படும்.
ஏற்கெனவே உற்பத்தியில் இருந்து வரும் சுரங்கங்கள் (ஷெட்யூல் 2) வகையில் 23 சுரங்கங்கள் பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை ஏலத்திற்கு விடப்படவுள்ளன.
உற்பத்தியைத் தொடங்க தயார் நிலையில் உள்ள ஷெட்யூல் 3 வகை சுரங்கங்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை ஏலம் விடப்படும்.” என்றார்.