இந்தியா

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்: பெண் பலி, 9 பேர் படுகாயம்

சாஹித் ராஃபிக்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஒரு பெண் பலியானார். மேலும் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதி கிராமங்களின் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள எல்லை கிராமங்களில் அமைந்திருக்கும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு முதல் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு 45 வயதான பெண் பலியானார். மேலும் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு மற்றும் சிறிய ரக பீரங்கிகளைக்கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்படுவதாக எல்லை பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

தாக்குதலினால் சம்பா பகுதியில் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்க அங்கிருக்கும் மக்கள் வெளியேற்றப்படுவதாக மாவட்ட துணை ஆணையர் ஷாஹித் இக்பால் சவுத்ரி கூறினார். துப்பாக்கிச் சண்டையை அடுத்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சோர்காலி பகுதி வழியாக நடைபெறவிருந்த மிகப்பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படை சாமர்தியமாக தடுத்து நிறுத்தியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்ட எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் கே.பதக் தெரிவித்தார்.

தீவிரவாதிகள் ஊடுருவ உதவுவதற்காகவே, திசை திருப்பும் முயற்சியாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

புத்தாண்டு நாள் முதல் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ராணுவ வீரர் உட்பட இருவர் பலியாகினர். இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT