வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத்(ஏஎஃப்எஸ்பிஏ) திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரோம் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது தொடுக்கப்பட்ட தற்கொலை முயற்சி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, கடந்த வியாழக்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார். சிறையி லிருந்து வெளியே வந்த இரோம் ஷர்மிளா மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரோம் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை அதிகாரி ஜல்ஜித் கூறும்போது, “தற்கொலை முயற்சி என்ற அதே குற்றச்சாட்டின்பேரில் இரோம் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் நலக் காரணங்களுக்காக மருத்துவ மனையில் வைத்து அவரது மூக்கில் குழாய் சொருகப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
கடந்த 5 மாதங்களில் இரோம் ஷர்மிளா சிறையிலிருந்து விடுவிக் கப்பட்டவுடன் மீண்டும் கைது செய்யப்படுவது இது 2-வது முறை யாகும். கடந்த 2000 நவம்பர் முதல் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு வலுக் கட்டாயமாக குழாய் மூலம் திரவ உணவு புகட்டப்படுகிறது.-ஏஎஃப்பி