காஷ்மீரில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எல்லை கிராமங்களில் இருந்து நிவாரண முகாம்களுக்கு 10,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லை கிராமவாசிகள் உயிருக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர். சம்பா, கத்துவா மாவட்டங்களில் இருந்து 10,000 பேர் வெளியாகியுள்ளனர்" என்றார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில், எல்லை பாதுகாப்புப் படை வீரர் தேவேந்திர குமார் உயிரிழந்தார்.
கடந்த ஒருவாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பெண் பலியானார். சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்தியாவின் பதில் தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்களும் ஒரு சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.