புதுடெல்லி: இந்தியாவில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உ.பி. முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.
இம்மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு குற்றவாளிகளுக்கு எதிரான என்-கவுன்ட்டர்கள காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உ.பி. காவல் துறை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: "உ.பி.யில் 2025ம் ஆண்டில் மட்டும் 2,739 என்கவுன்ட்டர்களை காவல் துறை நடத்தி உள்ளது. இவை அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டு நடத்தப்பட்டன. இதில் 3,153 குற்றவாளிகள் காயமடைந்தனர். ஒரு காவலர் வீரமரணம் அடைந்தார். உ.பி.யின் 48 முக்கிய குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். முந்தைய 8 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
உ.பி.யில் கடந்த 2017 மார்ச் 20-ம் தேதி தொடங்கி 2025 டிசம்பர் 29ம் தேதி வரை மொத்தம் 266 குற்றவாளிகள் என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2018-ல் 41, 2019-ல் 34, 2020 மற்றும் 2021-ல் தலா 26 என குற்றவாளிகள் என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2025-ல் சட்டவிரோத மத மாற்றம் தொடர்பாக 475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 855 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 379 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பசு கடத்தல் மற்றும் பசு வதைக்கு எதிராக 1,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,128 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 958 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1,886 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.7.38 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2025-ல் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் 8,543 இருசக்கர வாகனங்கள், 911 நான்கு சக்கர வாகனங்களை காவல்துறை மீட்டுள்ளது. ரூ.28.69 கோடி ரொக்கம், ரூ.52.27 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.58.17 கோடி மதிப்புள்ள பிற சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது. இவ்வாறு ராஜீவ் கிருஷ்ணா கூறினார்.