இந்தியா

கட்சித் தலைவர் படங்களுடன் அரசு விளம்பரம்: உடனடியாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

கட்சித் தலைவர்களின் படங்க ளுடன் வெளியிடப்படும் அரசு விளம்பரங்களுக்கு உடனே தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதுகுறித்து நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொது நோக்கத்துக்கான தொண்டு நிறுவனம் மற்றும் பொது நல மனுக்களுக்கான மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “அரசு பணத்தில் ஆளுங்கட்சி சார்பில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி களில் விளம்பரங்கள் வெளியிடப் படுகின்றன. மக்கள் பணத்தில் தலைவர்கள் தங்கள் படங்களை பெரிய அளவில் வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடிக் கொள் கின்றனர். இந்த விளம்பரங்களைத் தடுக்க விதிமுறைகளை வகுக்க வேண்டும்” என்று கூறப்பட்டி ருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்க போபால் தேசிய நீதித்துறை அகாடமி முன்னாள் இயக்குநர் மாதவ மேனன், மக்களவை முன்னாள் செயலர் டி.கே.விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலர் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்தது.

இக்குழு விசாரணை நடத்தி கடந்த அக்டோபரில் தனது அறிக் கையை அளித்தது. அதில், ‘அரசு விளம்பரங்கள் அரசியல் ஆதாயத்துக்கு தவறாக பயன் படுத்தப்படுகின்றன. இதன்மூலம் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. இந்த விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் கள் படங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் பெயர், புகைப்படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று பரிந்துரை அளிக்கப்பட்டிருந்தது.

மக்கள் வரிப்பணம் வீண்

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘நிபுணர்குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வெளியிட உடனே தடை விதிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் அரசு விளம்பரங்கள் என்ற பெயரில் வீணடிக்கப்படுகிறது’’ என்று வாதிட்டார்.

எதிர்தரப்பின் கருத்தைக் கேட்காமல், போகிற போக்கில் தடை விதிக்க முடியாது என்று மறுத்த நீதிபதிகள், நிபுணர்குழு அளித்துள்ள அறிக்கை குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT