பாஜகவின் தேர்தல் பணிகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுகமாக கவனித்து வருவதாகவும், அக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்களை தேர்வு செய்தது ஆர்.எஸ்.எஸ்.தான் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.
திருச்சூரில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஏ.கே.அந்தோனி கூறியதாவது: “பாஜகவின் தேர்தல் பணிகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுகமாக மேற்கொண்டு வருகிறது. நரேந்திர மோடி பிரதமராவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. நாட்டில் மோடி அலை எதுவும் வீசவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அவ்வாறு கூறி பிரச்சாரம் செய்கின்றன. ஒருவேளை மோடி பிரதமரானால், அது நாட்டிற்கு ஏற்படும் பேராபத்தாக இருக்கும். மத ரீதியாக நாட்டில் பிளவு ஏற்படும். ஒற்றுமை சீர்குலைந்துவிடும்.
மோடிக்கு பெரும்பாலான மக்களின் ஆதரவு இல்லை. குஜராத்தில் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர் நிலம் உள்ளிட்டவற்றை தாராளமாக வழங்கினார். அதனால், அந்நிறுவனங்கள் அவருக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
மோடி எத்தனை முறை கேரளத்திற்கு வந்தாலும், இங்கு பாஜகவால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.
புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கு விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனது தவறை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து தவறான அரசியலை மார்க்சிஸ்ட் கடைப்பிடித்து வந்தால், அக்கட்சி காணாமல் போய்விடும்” என்றார் ஏ.கே.அந்தோனி.