இந்தியா

‘தூய்மை இந்தியா’ திட்ட தூதர்களாக எஸ்.பி.பி., வி.வி.எஸ். லட்சுமண் நியமனம்

பிடிஐ

தூய்மை இந்தியா திட்ட தூதர்களாக பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (எஸ்.பி.பி.), கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இத் திட்டத்தில் அந்தந்த மாநில பிரபலங்கள் தூதர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆந்திர மாநில தூதர்களாக திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கிரிக் கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண், டி.ஆர்.எஸ். எம்.பி. கவிதா, தெலுங்கு தேசம் எம்.பி ஜெயதேவ் கல்லா, பாட்மிண்டன் பயிற்சி யாளர் கோபிசந்த், தெலுங்கு நடிகர் நிதின் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா தூதர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தை விளக்கி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறப்பு பாடலை பாடினார். இப்பாடல் தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வி.வி.எஸ். லட்சுமண் பேசிய போது, எனது குழந்தைகளுக்கு கூட தூய்மை இந்தியா திட்டம் குறித்து முழுமையாகத் தெரிந்திருக்கிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியபோது, “நடிகர் பவன் கல்யாண், பிசிசிஐ இடைக் கால தலைவர் ஷிவ்லால் யாதவ் ஆகியோரும் தூய்மை இந்தியா திட்ட தூதர்களாக செயல்பட உள்ளனர், அவர்களால் இந்த விழாவில் பங்கேற்க முடிய வில்லை” என்றார்.

SCROLL FOR NEXT