இந்தியா

நிலக்கரி சுரங்க மறு ஏல மசோதா நிறைவேறியது

பிடிஐ

ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக உச்ச நீதிமன்றம் ரத்து செய்த 204 நிலக்கரி சுரங்கங்களுக்கு மறு ஏலம் நடத்த வகை செய்யும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

கடந்த அக்டோபரில் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு பதிலாக இந்த நிலக்கரி சுரங்க (சிறப்பு நெறிமுறைகள்) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது. அப்போது இந்த மசோதாவை ஆராய நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் ஆகிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நிலக்கரி துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்த ஏலத்தின் மூலம் நிலக்கரித் துறை தனியார் மயமாகிவிடும் என்று சில உறுப்பினர்கள் கவலை தெரிவிப்பது தேவையற்றது. உண்மையில் பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியாவை நாங்கள் வலிமையாக்கி வருகிறோம். நிலக்கரி சுரங்க மறு ஏலம் மிகவும் வெளிப்படையாக இருக்கும். சுரங்க ஒதுக்கீட்டில் எவ்வித ஒளிவு மறைவும் இருக்காது. மின்னணு முறையில் ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சுரங்க தொழிலாளர்கள் நலன்களை காக்கவும், நிலக்கரி சுரங்க திட்டங்களால் தங்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும் மக்களின் நலன்களை பாதுகாக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது” என்று தெரிவித்தார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பெருமளவில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் 204 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை கடந்த செப்டம்பரில் ரத்து செய்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT