மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சிவிசி) தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை எங்கள் அனுமதியின்றி நியமிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
காலியாக உள்ள மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவர், துணைத் தலைவர் பதவி களை நிரப்ப மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இப் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் நடைமுறை வெளிப்படையாக இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு கடந்த முறை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘பொதுமக்களில் இப்பதவிக்கு தகுதியானவர்கள் இருக்க மாட்டார்களா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி மதன் லோக்கூர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
120 பேர் பரிந்துரை
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி களுக்கு 20 பேர் பரிசீலிக் கப்பட்டு, அவர்களில் ஐந்து பேர் தேர்வுக் குழுவின் பரிசீல னைக்கு பரிந்துரைக்கப்பட்டுள் ளனர்’ என்றார்.
ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவரை மத்திய அரசு தேர்வு செய்த பின், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். ஆனால், தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவே வழக்கு தொடர்வதை ஏற்கக் கூடாது என்றும் முகுல் ரோத்கி வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “மத்திய அரசு ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்வு செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அவர்களது தகுதியை ஆய்வு செய்தபின் அனுமதி அளிக்கப்படும்.
ஜனவரி 15-ம் தேதிக்குள் இப்பதவிகளுக்கு நியமிக்கப் படுபவர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் ஒப்புதல் அளித்தபின் மத்திய அரசு நியமனத்தை மேற்கொள்ளலாம்” என்று உத்தரவிட்டனர்.