இந்தியா

என் மகன் என்னை ஏமாற்றிவிட்டான்- ஐ.எஸ்.ஸில் இணைந்த இளைஞரின் தந்தை குமுறல்

ராஷ்மி ராஜ்புத்

ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த 4 இந்திய இளைஞர்களில் ஒருவரது தந்தை கூறும்போது, "என் மகன் என்ன குற்றம் செய்தானோ அந்த குற்றத்துக்கு ஏற்ப சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும்" என்றார்.

தன்வீர் ஷேக், ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த இந்திய இளைஞர்களுள் ஒருவரான பஹத்தின் தந்தை இவர். 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், "என் மகன் என்ன குற்றம் செய்தானோ அந்த குற்றத்துக்கு ஏற்ப சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும்" என்றார்.

ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த ஆரிஃப் மஜீத் என்ற இளைஞரை உளவுத்துறை மீட்டுள்ளது. அவரை காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு நிறுவனம் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், தன்வீர் ஷேக் மேலும் கூறியதாவது: "மஜீத் கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்தேன். எங்கள் மகனும் இந்தியா திரும்பும்போது இதேநிலைதான் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி கைது செய்யப்படும்போது எனது மகன் புலனாய்வுக் குழுவினரிடம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விரும்புகிறேன். அவன், அதிகாரிகளிடம் எந்த உண்மையையும் மறைக்கக்கூடாது. நாங்களும் விசாரணைக்கு எவ்விதத்திலும் இடையூறு செய்ய மாட்டோம்.

என் மகனுக்கு இந்திய மதிப்புக்கு ரூ.3 லட்ச சம்பளத்தில் குவைத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அவர் அதை விட்டுவிட்டு ஆயுதங்கள் பின் போயுள்ளான். இனி அவன் எதிர்காலம் என்னவாகும்?

கடைசியாக பஹத் எங்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் பேசினார். அப்போதெல்லாம், மஜீத் போல அவரும் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்தார். அண்மைக்காலமாக நான், பஹத்திடம் நிறைய பேசுவதில்லை. பஹத்தும் அவரது தாயாருமே பேசிக் கொண்டனர்.

எனது குடும்பம் தேசப்பற்றுள்ள குடும்பம். எங்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் சிறிய குற்றம்கூட செய்ததில்லை. எதற்காகவும் காவல் நிலையத்திற்குச் சென்றதில்லை. ஆனால், என் மகன் என்னை ஏமாற்றிவிட்டான். அவனுக்கு பிரகாசமான எதிர்காலம் இருந்தது. ஆனால், அவன் எங்கள் அன்பை துட்சமாகக் கருதி எங்களை ஏமாற்றிவிட்டான்.

என் மகன் இப்படி திசை மாறிப்போக இணையதளம்தான் காரணம். அது இப்போது ஊர்ஜிதமாகிவிட்டது. இனியாவது அரசு இணையதளங்களை கண்காணித்து. தவறான மதப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்தி இளைஞர்கள் இத்தகைய செயல்களுக்கு பலியாவதை தடுக்க வேண்டும்" என்றார்.

உங்கள் மகனை மன்னிப்பீர்களா என்ற கேள்விக்கு, "ஒரு தந்தை கல் மனதாக இருக்க முடியும், ஆனால் ஒரு தாய்க்கு என்ன பதில் சொல்ல முடியும"் என்றார்.

ஆரிஃப் மஜீத், பஹத் ஷேக், அமான் டண்டெல், ஷாஹிம் தாங்கி ஆகிய 4 இளைஞர்களும் மும்பை கல்யாண் மாவட்டம் தானே பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 4 பேரும் கடந்த மே மாதம் 25-ம் தேதி எடிஹாட் விமானம் மூலம் பாக்தாத்துக்கு புனித யாத்திரை சென்றனர். மே 31-ல் தனியார் டாக்சி வாகனத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மொசூல் நகருக்குச் சென்று ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்ததாகத் தெரிகிறது.

ஆரிஃப் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் உள்பட நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 125-ன் கீழ், மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 16,18, 20 ஆகியவற்றின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT