இந்தியா

தமிழக மீனவர்கள் விவகாரம்: திமுக - அதிமுக உறுப்பினர்கள் மோதல்

பிடிஐ

மாநிலங்களைவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தமிழக மீனவர்கள் விவகாரத்தை திமுக, இந்திய கம்யூனிஸ்ட், சிபிஎம்.கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.

அதோடு மட்டுமல்லாமல் பிரதமர் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது பற்றிய விவகாரத்தை தமிழகக் கட்சிகளை சேர்ந்த உறுப்பினரக்ள் பலர் எழுப்பினர். இந்த விவகாரத்தில் திடீரென திமுக, அதிமுக உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

மீனவர்கள் கைது விவகாரத்தை எழுப்பிய திமுக உறுப்பினர் சிவா, பல முறை இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பிரச்சினையை எழுப்புவதே விரயமான காரியமாகப் போய்விட்டது. என்றார்.

மேலும், தான் கடந்த 15 நாட்களில் 2-வது முறையாக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது பற்றி எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா-இலங்கை நாடுகளிடையே கடல் எல்லை பற்றிய விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது என்றும், கச்சத்தீவு விவகாரமும் இப்படியே. எனவே முதலில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் மீனவர்கள் விவகாரம் உட்பட முந்தைய ஆட்சியும் சரி தற்போதைய ஆட்சியும் சரி தமிழகத்தின் கோரிக்கைகளை முற்றிலும் புறக்கணிப்பது குறித்து தமிழக மக்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று கூறினார் சிவா.

அதிமுக உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறுகையில், இலங்கையில் தமிழக மீனவர்கள் அடிமைகளாக நடத்த்தப்படுகின்றனர் என்றார்.

மேலும், இலங்கை நீதிமன்றத்தினால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களைக் காப்பாற்றியதற்காக பிரதமர் மோடி மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து திமுக உறுப்பினர் ஒருவர் அதிமுக குறித்து ஏதோ ஒரு கருத்தைக் கூற இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. வி.மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்களின் இருக்கைகளை நோக்கி வேகமாகச் சென்றனர்.

பிரச்சினையை உணர்ந்த தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அருகில் சென்று சமாதானம் செய்ய முயன்றார். பிறகு இருதரப்பினரும் ஒருவரையொருவர் மாறிமாறிக் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் யோகா கற்கவேண்டும் என்று நவநீதகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, “நாம் அவையின் கவுரவத்தைக் காக்கவேண்டும். நாம் வசைமொழிகளைப் பயன்படுத்தக் கூடாது. நாம் நமது கருத்தைத் தெரிவிக்கலாம். ஆனால் உணர்ச்சிவசப்படக்கூடாது” என்றார்.

டி.ராஜா, பிரதமர் மோடி மீனவர்கள் விவகாரம் குறித்து பதில் அளித்திருக்க வேண்டும் என்றார். டி.கே. ரங்கராஜனும் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாக கூறினார்.

இதற்கு ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, அரசு இந்த விவகாரத்தில் அனைத்து கவலைகளையும் பகிர்ந்து கொள்கிறது என்றும், தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு அனைத்தும் செய்யப்ப்படும் என்று உறுதி அளித்தார்.

SCROLL FOR NEXT