இந்தியா

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: மன்மோகன் சிங்கிடம் வாக்குமூலம் பெற சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ஹிண்டால்கோ நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிண்டால்கோ வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய சிபிஐ-ன் கோரிக்கையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஒடிஸா மாநிலத்தில் உள்ள தலபிரா 2 சுரங்கம் கடந்த 2005-ம் ஆண்டில் பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது நிலக்கரித் துறை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வசம் இருந்தது.

இந்நிலையில் இந்தச் சுரங்கம் ஹிண்டால்கோவுக்கு முறை கேடாக ஒதுக்கப்பட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிண்டால்கோ நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கை முடித்துக் கொள்வதாக கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை கடந்த நவம்பர் 25-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், 2005 முதல் 2009 வரை மன்மோகன் சிங் வசம் நிலக்கரித் துறை இருந்துள்ளது, ஆனால் ஹிண்டால்கோ வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி பாரத் பராசர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற சிபிஐ-க்கு உத்தரவிட்டார்.

மேலும் வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய சிபிஐ-ன் கோரிக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஹிண்டால் கோவின் பங்குகள் நேற்று சரிவைச் சந்தித்தன.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 1993 முதல் ஒதுக்கப்பட்ட அனைத்து சுரங்கங்களின் உரிமங் களையும் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT