மும்பை கடற்கரையில், மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜிக்கு ரூ. 1,900 கோடியில் 309 அடி உயர சிலை நிறுவும் மகாராஷ்டிர அரசின் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
இது தொடர்பாக அவர் நேற்று கூறும்போது, “மும்பை கடற்கரையில் சிவாஜிக்கு சிலை அமைப்பது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் இதுதொடர்பாக என்னிடம் பேசினார். அப்போது விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தேன். இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளோம். இது தொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியாகும்” என்றார்.
மும்பையில் அரபிக் கடலோரத்தில் சிவாஜிக்கு 309 அடி உயர சிலையுடன் கூடிய நினைவகம் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தேசிவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2004-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டத்துக்கு இந்திய கடற்படை எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இத்திட்டம் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு புறம்பானது என்றும் சுட்டிக்காட்டியது. இதனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதற்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்தது.
அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை மற்றும் கன்னியாகுமரி யில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை போல சிவாஜி நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது