இந்தியா

ஆல் இஸ் வெல் படத்திலிருந்து அமைச்சர் ஸ்மிருதி விலகல்

பிடிஐ

'ஆல் இஸ் வெல்' எனும் இந்தித் திரைப்படத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி விலகியுள்ளார். நேரமின்மையே இதற்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் உமேஷ் ஷுக்லா வின் இயக்கத்தில் 'ஆல் இஸ் வெல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் அபிஷேக் பச்சன் மற்றும் அசின் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் ரிஷி கபூருக்கு ஜோடியாக ஸ்மிருதி இராணி நடித்து வந்தார்.

இந்தப் படத்துக்காக‌ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஸ்மிருதி இராணி மனிதவளத்துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆயினும், விடுமுறை காலங்களில் எல்லாம் நடிக்க முயற்சித்து வந்தார். எனினும் அதில் பல சிக்கல்கள் உண்டாயின. இதைத் தொடர்ந்து அவர் அந்தப் படத்தில் இருந்து விலகி உள்ளார். இந்த விலகல் இணக்கமாக முடிந்தது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்மிருதி இராணி கூறும்போது, "இந்தப் படத்தில் இருந்து விலகியது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், நான் இந்த நாட்டுக்காக உழைக்க வேண்டி இருக்கிறது. இந்த நாடு என்னிடமிருந்தும் இந்த அரசிடமிருந்தும் நிறைய எதிர்பார்க்கின்றன. இந்த நாட்டு மக்கள் என்மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்களை நான் ஏமாற்ற முடியாது.

என்னுடைய விலகலால் படக் குழுவினர் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். மேலும், அவர்களும் என்னைப் புரிந்துகொண்டிருப்பதால் நான் அவர்களுக்கு எனது நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறேன். வார இறுதிகளிலாவது அந்தத் திரைப்படத்தில் என்னுடைய பகுதிகளை நடித்துக் கொடுக் கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது திட்டமிட்டபடி நடக்கவில்லை" என்றார்.

இதனால் இந்தப் படத்தின் மறு படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைபெற்று ஜூலை 3ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT