இந்தியா

சாமியார் ராம்பாலின் பாதுகாவலர்களாக இருந்த ராணுவ வீரர்கள், காவல் துறையினர் கைது

செய்திப்பிரிவு

ராம்பால் ஆசிரமத்தில் அவரைக் கைது செய்ய நடந்த முயற்சிகளின் போது, அவரின் பாதுகாப்பு அதிகாரிகளாகச் செயல்பட்ட முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள், காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவின் ஹிசாரில் சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. ராம்பால் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அவரைக் கைது செய்ய போலீஸார் சென்றபோது பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.

பின்னர் அதிரடியாக உள்ளே நுழைந்த போலீஸார், ராம் பாலைக் கைது செய்தனர். அங்கி ருந்து ஆயுதக்குவியல்கள் கைப் பற்றப்பட்டன. மேலும், ராம்பாலின் பாதுகாவலர்கள் ஆறு பேர் மற்றும் உதவியாளர்கள் ராம் கன்வர் காதா, ஓ.பி. ஹூடா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு, பஞ்சாப், ஹரி யாணா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரியாணா காவல் துறை தலைவர் நிவாஸ் வசிஷ்ட் சார்பில் ஒரு பிரமாண பத்திர மும், கூடுதல் தலைமைச் செயலர் பி.கே. மகாபத்ரா சார்பில் ஒரு பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டன. டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், “ராம்பால் கைது நடவடிக்கையின் போது அவரின் பாதுகாவல்படையிலிருந்த மூன்று முன்னாள் ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ வீரர், பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் ஒருவர், பணியில் உள்ள தலைமைக் காவலர் ஒருவர் என ஆறுபேர் கைது செய்யப்பட்டதாக” தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ராஜேந்தர் பணி நீக்கம் செய்யப் பட்டு விட்டார் எனவும் தெரிவிக்கப் பட்டது. வழக்கு விசாரணை 55 நிமிடங்கள் நடைபெற்றது. சாமியார் ராம்பால், அவரின் உதவியாளர்கள் ராம் கன்வர் காதா, ஓ.பி. ஹூடா ஆகியோர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப் பட்டனர். கைதுசெய்யப்பட்ட ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ராணுவம் மற்றும் ஹரியாணா காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஹரியாணா கூடுதல் தலைமைச் செயலர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ராம்பால் 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பல்வேறு வங்கிகளில் வைத்திருந்ததாகவும், அவற்றில் ரூ. 1.32 கோடி பணம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் சொத்து விவரங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவற் றுக்கு முறையாக வரி செலுத்தப் பட்டதா என்பது குறித்து வருமான வரித்துறை விவரங்கள் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT