நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், சோனியா மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான சம்மனுக்கு விதிக்கப்பட்ட தடையை, மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வரும் வரை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கையகப்படுத்தி, அதன் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, பொருளாளர் மோதி லால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் சுமன் துபே ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்ட 5 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
தங்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டதை எதிர்த்து சோனியா, ராகுல் உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது, சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று இவ்வழக்கு நீதிபதி வி.பி. வைஷ் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சம்மனுக்கு விதிக்கப்பட்ட இடைக் காலத் தடை, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை முடியும் வரை நீட்டிக்கப்படுகிறது. வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் தினமும் இவ்வழக்கு முதல் வழக்காக விசாரிக்கப்படும்” என்றார்.