இந்தியா

ரூ.70,000 கோடி ஊழல்: அஜித் பவாரிடம் விசாரணை

பிடிஐ

மகாராஷ்டிர மாநில நீர்ப்பாசன திட்டங்களில் ரூ.70,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்த அந்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது துணை முதல்வர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுனில் தாட்கரே ஆகியோர் நீர்ப்பாசன துறை அமைச்சர்களாக பதவி வகித்தனர்.

அவர்கள் இருவரும் ரூ.70,000 கோடிக்கு ஊழலில் ஈடுபட்டிருப்பதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 2012 பொருளாதார ஆய்வறிக்கையில், நீர்ப்பாசன திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் 0.1 சதவீத அள வுக்கே நீர்ப்பாசன வசதி மேம்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாக கொண்டு இருவர் மீதும் விசாரணை நடத்த மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சாஹன் புஜ்பால், டெல்லியில் மகாராஷ்டிர இல்லம் கட்டியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த விவகாரம் குறித்தும் விசாரணை நடத்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT