கருப்பு பண விவகாரத்தில் திருட்டு தகவல்களை ஆதாரமாக ஏற்கமாட்டோம் என்று சுவிட்சர்லாந்து அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி முன்னாள் ஊழியர் ஹெர்வி பால்சியானி 1,30,000 வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை பிரான்ஸ் அரசிடம் 2008-ம் ஆண்டில் அளித்தார்.
கருப்பு பண பதுக்கல்காரர்கள் அடங்கிய அந்த பட்டியலை இந்தியாவிடம் பிரான்ஸ் அரசு அளித்துள்ளது. ஆனால் அந்த வங்கிக் கணக்கு விவரங்கள் சட்டவிரோதமாக திருடப்பட்டவை, அவற்றை ஆதாரமாக ஏற்க முடியாது என்று சுவிட்சர்லாந்து அரசு கூறிவருகிறது. இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் லினஸ் வான் காஸ்டில்முர் இதனை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
விருது விழாவில் பேட்டி
விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜியின் தலைமைப் பண்பை பாராட்டும் வகையில் சுவிட்சர்லாந்து அரசு சார்பில் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மும்பையில் நடந்த விழாவில் அசிம் பிரேம்ஜிக்கு சுவிட்சர்லாந்து தூதர் லினஸ் விருதினை வழங்கி கவுரவித்தார்.
அப்போது பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு லினஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். எங்கள் நாட்டு சட்டப்படி அந்த விவரங்களை வெளியிடமுடியாது. கருப்பு பண விவகாரத்தில் இந்தியாவின் நிலையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இதுதொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு முழுஒத்துழைப்பு அளிக்க சுவிட்சர்லாந்து அரசு தயாராக உள்ளது. ஆனால் திருடப்பட்ட தகவல்களை ஆதாரமாக ஏற்க முடியாது.
இந்தியாவில் வரிஏய்ப்பு செய்து சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து உண்மையான ஆதாரங்களை சமர்ப்பித்தால் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிவரும் காலங்களில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யும் இந்தியர்கள், ஜெர்மானியர்கள், அமெரிக்கர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளின் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் அளிக்கப்படும். ஆனால் கடந்த 50 ஆண்டுகால வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.