இந்தியா

டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம்: கைதான டிரைவரின் பின்னணி தகவல்கள்

பிடிஐ

டெல்லியில், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான டாக்ஸி டிரைவர் ஷிவ்குமார் யாதவ், ஏற்கெனவே பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்கில் கைதானவர் என்பது தெரியவந்துள்ளது.

புது டெல்லியில் நேற்று முன் தினம் இரவு, பணி முடிந்து கால் டாக்ஸியில் வீடு திரும்பிய பெண்ணை, அந்த கால் டாக்ஸியின் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்தார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

போலீஸிடம் சிக்கிய ஷிவ்குமார் யாதவ் (32) அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2011-ல் தெற்கு டெல்லியில் மெஹ்ராலி பகுதியில் நடந்த ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும் பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஷிவ்குமார் யாதவின் வாக்குமூலத்தை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். யாதவ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில், திங்கள்கிழமை காலை, ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்தது என்ன?

புது டெல்லியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் 26 வயது பெண் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து இரவு விருந்தில் பங்கேற்றார். பின்னர் இரவு 9.30 மணியளவில் குர்காவ்ன் பகுதியில் இருந்து டெல்லி வசந்த விஹாரில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல கால் டாக்ஸியை வரவழைத்தார்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்த அவர் அசதியின் காரணமாக தூங்கிவிட்டார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்திய டிரைவர், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். திடுக்கிட்டு விழித்த அவர் கூச்சலிட்டார்.

அவரது வாயைப் பொத்தி இரும்பு கம்பியால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய டிரைவர், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இந்தச் சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்து அவரை வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார்.

அப்போது காரின் பின்பகுதியை அந்தப் பெண் செல்போன் கேமராவில் படம் பிடித்தார். அந்த ஆதாரத்துடன் டெல்லி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

இது தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர தேடுதல் வேட்டையில் உத்தரப் பிரதேசம் மதுராவில் பதுங்கியிருந்த கார் டிரைவர் சிவகுமார் யாதவ் (32) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கடந்த 2012 டிசம்பரில் மருத்துவக் கல்லூரி மாணவியை 6 பேர் ஓடும் பஸ்ஸில் கொடூரமாக பலாத்காரம் செய்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். அதேபோன்ற சம்பவங்கள் டெல்லியில் தொடர்கதையாகி வருகின்றன.

SCROLL FOR NEXT