இந்தியா

2013-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி மரண தண்டனைக்கு 382 கைதிகள் காத்திருப்பு

செய்திப்பிரிவு

2013-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் 382 மரண தண்டனை கைதிகள் தண்டனைக்கு காத்திருப்பதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பரதிபாய் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதில்:

மரண தண்டனை கைதிகளுக்கு கருணையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மன்னிப்பு வழங்க அரசியல் சட்டத்தின் 72-வது பிரிவு வகை செய்கிறது. இப்பிரிவின் கீழ் கடந்த 34 ஆண்டுகளில்123 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன.

இவற்றில் சண்டீகரைச் சேர்ந்த பல்வந்த்சிங் ரஜோனா, அசாமைச் சேர்ந்த மன் பகதூர் திவான், கேரளத்தைச் சேர்ந்த அந்தோனி ஆகிய 3 பேரின் மனுக்கள் தவிர மற்ற அனைத்தும் முடித்து வைக்கப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலித்து முடிவு எடுக்க காலக்கெடு ஏதுமில்லை. என்றாலும் இவை இயன்றவரை விரைந்து முடித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT