மக்களவை உறுப்பினரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.தேவகவுடா கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது ’காவிரிக்காக இறுதி மூச்சுள்ள வரை போராடுவேன்’ என்று கூறினார்.
5-வது மத்தூர் கன்னட சாகித்ய சம்மேளனத்தை அபலவாதி கிராமத்தில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் பேசியதாவது:
பல பத்தாண்டுகளாக காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தே கர்நாடகத்திற்கு நீதி கிடைக்கவில்லை.
பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகளுக்கு செவிசாய்த்தல் கூடாது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியை நம்பி வாழும் விவசாயிகளைப் பாதுகாக்க பிரதமர் மோடி புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும்.
எனவே காவிரி விவகாரத்தில் நீதி கிடைக்க எனது இறுதி மூச்சுள்ள வரை போராடுவேன், கர்நாடக மாநிலத்திற்கு இந்த விஷயத்தில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
கர்நாடகாவின் வடக்கு பகுதி முன்னேற தலைவர்கள் பாடுபடவேண்டும், மாநிலத்தை பிரிப்பதில் ஆர்வம் காட்டக்கூடாது, என்றார் தேவ கவுடா.