இந்தியா

பொருளாதார சீர்திருத்தங்களுக்காக நாடு காத்துக் கொண்டிருக்காது: அருண் ஜேட்லி திட்டவட்டம்

பிடிஐ

காப்பீட்டுத் துறையில் 49% அன்னிய நேரடி முதலீட்டுக்கான மசோதா, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சியை நோக்கிய சீர்திருத்தங்களுக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மக்களவையில் காப்பீட்டு மசோதா இன்னொரு முறை தடை செய்யப்பட்டால், இணை அமர்வைக் கூட்டும் அளவுக்கு அரசு செல்லத் தயங்காது என்பதையும் ஜேட்லி வலியுறுத்தினார்.

"காப்பீட்டு மசோதா அரசின் உறுதிப்பாட்டையும், சீர்திருத்தங்களுக்கான கடப்பாட்டையும் அறிவுறுத்துகிறது. மேலும், எங்களது திட்டத்தை நடைமுறைப்படுத்த மக்களவை காலவரையற்று காத்திருந்தாலும், நாங்கள் காத்திருக்கப் போவதில்லை என்பதை உலகிற்கும் முதலீட்டாளர்களுக்கும் அறிவிக்கிறது இந்த மசோதா” என்றார் அருண் ஜேட்லி.

“நாடாளுமன்றத்தை முடக்குவதும், இடையூறு செய்வதும் நிரந்தரமாக முடியாது. நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்கப் படாவிட்டாலும், தீர்மானம் நிறைவேற்றுவதைத் தடுக்க முடியாதவண்ணம் இந்திய அரசியல் சாசன வடிவமைப்பாளர்கள் வசதி செய்து கொடுத்துள்ளனர்.

மக்களவையின் ஒரு அவை மசோதாக்களை ஏற்கவில்லை என்றாலும், வேறு வழிவகைகள் உள்ளன. நீங்கள் ஏன் அரசியல் சாசனத்தை வாசித்துப் பார்க்கக் கூடாது. அப்போது உங்களுக்கு விடை தானாகவே தெரிய வரும்” என்றார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டிய தேவை என்ன என்ற கேள்விக்கு, “நிறைய தாமதம் ஆகிவிட்டது. அதனால்தான் அவசரச் சட்டம் தேவைப்பட்டது” என்றார்.

குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்வதை அடுத்து காப்பீட்டுத் துறையில் சீர்திருத்தங்களை அவசரம் அவசரமாக மத்திய அரசு கொண்டு வர முயற்சி செய்கிறது என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT