இந்தியா

ஃபேஸ்புக் நிர்வாகத்தினரால் உயிருக்கு ஆபத்து: ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொறியாளர் வழக்கு

என்.மகேஷ் குமார்

ஃபேஸ் புக் நிர்வாகத்தினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்ப தாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கும்படி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் பிரதீப் குமார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த பிறகு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி வந்தேன். அப்போது ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஃபேஸ் புக்கில் உள்ள குறைகள் என்ன என கேட்டனர். இதற்கு அதில் உள்ள முறை கேடுகள், மோசடிகள் குறித்து எடுத்துக் கூறினேன்.

இதையடுத்து எனக்கு வேலை தர முடியாது என கூறியதுடன், அல்காய்தா தீவிரவாத அமைப் புடன் எனக்கு தொடர்பு இருப்பதாக எனது புகைப்படத்துடன் இணைய தளத்தில் தகவல் வெளியிட்டன. இதனால் நான் பல பிரச்சினை களை சந்தித்து வருகிறேன். சிலர் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஹைதராபாத் நகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். எனவே, தயவு செய்து ஃபேஸ்புக் நிர்வாகத்தினரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், பிரதீப் குமாருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும்படி தெலங்கானா உள் துறை அமைச்சகத்துக்கு உத்தர விட்டது.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தது.

SCROLL FOR NEXT