ஹரியாணா மாநிலம், ரோட்டக் பேருந்து ஒன்றில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேரை விளாசிய சகோதரிகள் விவகாரத்தில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த சகோதரிகளின் ‘தைரியத்தை’ பாராட்டி ஹரியாணா மாநில அரசு அவர்களை கவுரவிப்பதாக இருந்தது. ஆனால் இப்போதைய திருப்பம் காரணமாக அதனை நிறுத்தி வைத்துள்ளது.
விளாசல் சகோதரிகளுக்கு எதிராக சம்பவத்தன்று அருகில் இருந்த வேறு 6 பெண்கள் போலீஸில் வாக்குமூலம் அளித்தனர். இதில் அந்த 3 இளைஞர்கள் மீது எந்தவித தவறும் இல்லை என்று கூறியுள்ளனர்.
ஈவ் டீசிங் பற்றிய விவகாரம் இது இல்லை என்றும், நோய்வாய்ப்பட்ட பெண்மணி ஒருவருக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சை என்றும் தெள்ளத் தெளிவாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
விளாசல் சகோதரிகளுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த 6 பெண்களில் ஒருவர் கூறும்போது, “குல்தீப் (குற்றம்சாட்டப்பட்ட இளைஞரில் ஒருவர் பெயர்), என்பவரிடம் தான் ஒரு டிக்கெட் எடுத்துத் தருமாறு கோரினேன். அப்போது ரோட்டக் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று கொண்டிருந்தது. உடல்நலம் குன்றிய பெண்மணிக்காக டிக்கெட் எடுத்துத் தர கோரினேன். இந்த சகோதரிகள் ஏற்கெனவே 8-ஆம் எண் இருக்கையில் அமர்ந்திருந்தனர், இது அந்த நோய்வாய்ப்பட்ட பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை. இளைஞர்கள் டிக்கெட்டை அந்தச் சகோதரிகளிடம் காண்பித்து இருக்கையை விட்டுவிடுமாறு கோரினர். பிறகு அந்த நோய்வாய்ப்பட்ட பெண்ணை வேறு இருக்கையில் அமருமாறு இளைஞர்கள் கூறினர். ஆனால் சகோதரிகள் வசைமாரியில் இறங்கினர்” என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே செவ்வாயன்று மற்றொரு பயணியும் இளைஞர்கள் மீது தவறில்லை என்று சாட்சியம் அளித்தனர்.
மோஹித், குல்தீப், தீபக் அகிய இளைஞர்களுக்கு ஆதரவாக அவர்களது கிராமமே கிளம்பியுள்ளது. கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய சாட்சியங்களின் படி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஷஷாங்க் ஆனந்த் என்பவர் கூறினார்.
இதற்கிடையே நவ.29ஆம் தேதி சம்பவத்தையொட்டி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மீண்டும் வேலையில் சேர்க்குமாறு ஹரியாணா சாலைப் போக்குவரத்துக் கழக் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்தத் திருப்பங்களுக்குப் பிறகு சகோதரிகளை கவுவரிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.