இந்தியா

மக்கள் மத்தியில் மூட நம்பிக்கையை போக்க சுடுகாட்டில் உண்டு, உறங்கிய அமைச்சர்

இரா.வினோத்

கர்நாடக மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கையை ஒழிப்ப தற்காக அம்மாநில அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி ஒரு நாள் முழுவதும் சுடுகாட்டில் தங்கினார்.

அமைச்சர் ஜார்கிஹோலி தனது சொந்த மாவட்டமான பெலகாவியில் உள்ள சதாசிவ நகர் வைகுந்தம் சுடுகாட்டுக்கு சனிக்கிழமை காலை சென்றார். அங்கு பிணங்களை எரிக்கும் இடத்தில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து அங்கு கூடிய மக்களிடம் மூட நம்பிக்கை மனித சமூகத்தை எப்படியெல்லாம் கெடுக்கிறது என்பது குறித்து துண்டறிக்கைகளை விநியோ கித்தார். இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் சிலரும் அங்கேயே சிறிய அளவில் மேடை அமைத்து தங்கினார். மதிய உணவு, இரவு உணவு அனைத்தும் அங்கேயே சாப்பிட்டார். மேலும் பொதுமக்களிடம் மூட நம்பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக பிணம் எரிக்கும் இடத்தில் சனிக்கிழமை இரவு படுத்து உறங்கினார். அப்போது தன்னுடன் யாரும் துணைக்கு படுக்கக்கூடாது எனக்கூறி அனை வரையும் அனுப்பி விட்டார்.

அம்பேத்கர் காட்டிய வழி

இதுகுறித்து ஜார்கிஹோலி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மூட நம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்களும், போராட்டங்களும் நடத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக எனது மனதில் இருந்தது. அதனை புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளன்று (டிச. 6) தொடங்கி இருக்கிறேன். அம்பேத்கர் காட்டிய வழியில் அரசியலுக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்டு இந்தப் போராட் டத்தை கர்நாடகம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளேன்.

சுடுகாட்டில் பேய்களும், பிசாசுகளும் இருக்கிறது என்ற மூடநம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. எனவே சுடுகாட்டை பார்த்து பயந்து நடுங்குகிறார்கள். இங்கு வந்தால் பிணங்கள் எழுந்து வந்து மனிதர்களை தின்று விடும் என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

ஆனால் சுடுகாட்டில்கூட சாதிவாரியாக தனித்தனியாக பிணங்களை எரிக்கிறார்கள். ஆதிக்க சாதியினர் புதைக்கப்படும் இடத்தில் தலித் மக்களை புதைக்க மறுக்கிறார்கள். ஆனால் பிணங்களை எரிக்கவும், குழி வெட்டவும், இன்னபிற சடங்குகளை செய்யவும் தலித் மக்களை பயன்படுத்துகிறார்கள்.

மனிதனின் வாழ்க்கை முடியும் இடத்தில்கூட மூட நம்பிக்கை நிலவுகிறது. எனவே சமூகத்தை சீரழிக்கும் மூட நம்பிக்கைக்கு எதிரான எனது போராட்டத்தை சுடுகாட்டில் இருந்து தொடங்கி இருக்கிறேன்.

சுடுகாடு ஒரு புனிதமான இடம் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற காரணத்தால் எனது பிரசாரத்தை இங்கிருந்து தொடங்கி இருக்கிறேன்.

மக்களிடையே நிறைந்திருக் கும் மூட நம்பிக்கைக்கு முக்கிய காரணம் அறியாமையும், கல்லா மையும்தான். எனவே மக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே நேரத்தில் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைப்பேன். ஏனென்றால் கல்வியின் மூலமாகவே மூட நம்பிக்கையையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் போக்க முடியும்.

இதனைத் தொடர்ந்து ஊர்கள் தோறும் சென்று சுடுகாட்டில் தங்கி மூடநம்பிக்கை எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்திருக் கிறேன். சுடுகாட்டில் தங்கும் போராட் டத்தைத் தொடர்ந்து சாதிக்கு எதிராகவும், பெண் அடிமைக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளேன். கட்சிகளைக் கடந்து சமூக விடுதலைக்காக நடத்தப்படும் இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ள விரும்புகிறவர்கள் கலந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

பல்வேறு இயக்கங்கள் ஆதரவு

மூட நம்பிக்கைக்கு எதிராக கர்நாடக அமைச்சர் சதீஷ் தொடங்கி இருக்கும் சுடுகாட் டில் தங்கும் போராட்டத்துக்கு பல்வேறு முற்போக்கு இயக் கங்களும், முற்போக்கு மடாதிபதி களும், மனநல மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் சமூக ஆர்வலர் ஹூலிகல் நட்ராஜ், எழுத்தாளர் பெலகாவி சித்தப்பா மற்றும் கர்நாடக முற்போக்கு மடாதி பதிகள் கூட்டமைப்பின் தலை வரும், நீடுமாமுடி மடாதிபதி யுமான வீரபத்ர சென்னமலா சுவாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

பல்வேறு அமைப்புகள் தங்களது ஊரில் உள்ள சுடுகாட்டிலும் அமைச்சர் தங்கி மூட நம்பிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT