மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு அவை முன்னிலையில் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் கூறினார்.
"ராமரை பின்பற்றுபவர்களின் ஆட்சி வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா என்று டெல்லி மக்கள் முடிவு செய்யவேண்டும்" என்ற அமைச்சர் நிரஞ்சன் ஜோதியின் கருத்து ஏற்படுத்தியுள்ள சர்ச்சையால் இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் எனவும், அமைச்சர் நிரஞ்சன் ஜோதி பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல் நாத், "பிரதமர் மோடி அவை நடவடிக்கைகளில் பல நாட்களுக்கு பின்னர் வந்து கலந்துகொண்டுள்ளார்.
தற்போது இந்த பிரச்சினை எழுந்துள்ள சமயம் அவர் அவையில் அமர்ந்திருந்தார். இருந்த போதும் இது குறித்து அவர் பேசவில்லை. முறையாக அவர் எழுந்து அவை முன்னிலையில் இதற்காக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.
மதச்சார்பற்ற மக்களின் மனதை புண்படுத்திய அமைச்சரின் கருத்தை இவர்கள் அமைதியாக நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள்" என்றார்.