கைப்பேசி குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) மூலம் புயல் எச்சரிக்கை மற்றும் அதுகுறித்த தகவல்களைத் தரும் புதிய முறையை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் பிறந்தநாளான நேற்று 'நல்லாட்சி தினம்' கடைப்பிடிக்கப்பட்டது. அதனையொட்டி மத்திய புவி அறிவியல் அமைச்சகம் எஸ்.எம்.எஸ். மூலம் புயல் தொடர்பான தகவல்களை மக்களுக்கு வழங்கும் புதிய முறையை அறிமுகம் செய்தது.
இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:
இந்தத் திட்டத்தின் மூலம் புயல் குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சியர், உள்ளூர் நிர்வாகிகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு குறுஞ்செய்திகள் மூலம் வழங்கப்படும்.
இந்தத் தகவல்கள் பள்ளி முதல்வர்களுக்கும் வழங்கப்படும். அதன் மூலம் ஆபத்துக் காலங்களில் குழந்தைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க முடியும்.
இந்தத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த ஓராண்டு காலம் ஆகும். அதற்குள் இந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும்.
இதற்காக, தேசிய தகவல் மையம், தேசிய பேரிடர் மேலாண்மை நிலையம், தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய மின்னணுத் துறை ஆகியவை உதவி செய்யும்.
இது வெறுமனே புயல் குறித்த தகவல்களை மட்டுமே தராமல், ஆபத்துக் காலங்களில் அரசும் மக்களும் என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
இந்தத் திட்டத்தைப் பயன் படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் www.rsmcnewdelhi@imd.gov.in
என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.இவ் வாறு அவர் கூறினார்.