இந்தியா

விவசாயிகள் தற்கொலை பற்றி ஆராய வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

பிடிஐ

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் குறித்து ஆராய்வது அவசியம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார். விவசாயக் கடனை அரசு தள்ளுபடி செய்வது குறித்தும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நேற்று தொடங்கிய இந்திய பொருளாதார சங்க கருத்தரங்கில் ரகுராம் ராஜன் பங்கேற்று பேசியதாவது:

சில மாநிலங்களில் சில நேரங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடன் தள்ளுபடியால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடன் தள்ளுபடிக்குப் பிறகு விவசாயிகளுக்கு கடன் கிடைப்பது கடினமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை.

விடுவிப்பது எப்படி?

அடுத்தபடியாக, விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக செய்திகள் வெளியாகின்றன. இந்த விவகாரம் நெஞ்சை பதற வைக்கிறது. விவசாயிகளை கடனிலிருந்து எப்படி விடுவிப்பது என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.

மேலும் விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்கள் பற்றியும் ஆராய்வது மிக மிக அவசியம். குறிப்பாக கடன் எந்த அளவுக்கு தற்கொலைக்கு காரணமாக அமைகிறது என்பதை அலச வேண்டும். வங்கிகள் வழங்கும் விவசாயக் கடன் மூலம் விவசாயிகளின் கடன் சுமை குறைந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

மானியத்தால் பலனா?

குறைந்த வட்டியில் விவசாயத் துக்கு கடன் தரப்படுகிறது. இது சாதகமான நிலையாகும். இந்த வசதி உரிய நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுகிறதா அல்லது இன்னும் அவர்களை கடனாளி ஆக்குகிறதா என்பதைக் கண்டறிவது அவசியம். பயிர் கடனுக்கு மானியம் தரப்படுகிறது. நீண்டகால கடனுக்கு மானியம் இல்லை. இதனால் விவசாயி களுக்கு நன்மை கிடைக்கிறதா என்பதை பார்ப்பதும் நல்லது. இவ்வாறு ராஜன் தெரிவித்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தகுதியில்லாத வர்கள் பலர் பலன் அடைந்ததாகவும் தகுதியானவர்கள் விடுபட்டதாகவும் இதில் பெருமளவு மோசடி நடந்திருக்கலாம் எனவும் அரசு தணிக்கைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் கீழ் சுமார் 3.69 கோடி சிறு மற்றும் மத்திய தர விவசாயிகளும் 60 லட்சம் இதர விவசாயிகளும் சுமார் 52 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்புக்கு கடன் தள்ளுபடி பெற்றனர்.

கடந்த ஆண்டில் புயல் பாதித்த விவசாயிகளுக்கு ஆந்திரா, தெலங்கானா அரசுகள் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவித்தன. இந்த இரு மாநிலங் களிலும் வங்கிகள் விவசாயத் துறைக்கு ரூ.1.3 லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT