சோதனை அடிப்படையில், மதுரை உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என மக்களவையில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் மனோஜ் சின்ஹா, "ரயில் நிலையங்களில் விநியோகிக்கப்படும் குடிதண்ணீர் சுகாதாரமானதாக இருக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் ரயில்வே நிர்வாகம் சோதித்து வருகிறது. குறைகள், புகார்கள் கவனிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேம்படுத்தப்பட்ட சேவை வழங்க, சோதனை அடிப்படையில், 8 ரயில் நிலையங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு (ஆர்.ஓ) மையங்கள் அமைக்கப்படும். இத்தகைய ஆலையை செயல்படுத்த தடையில்லா மின்சாரம் தேவைப்படுகிறது.
முதல்கட்டமான போபால், துவாரகா, குவாஹாட்டி, ஹஸ்ரத் நிஸாமுதீன், மதுரை, பாட்னா, திருப்பதி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு மையங்கள் சோதனை அடிப்படையில் அமைக்கப்படும். அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் குடி தண்ணீர் 1 லிட்டர் ரூ.15-க்கு விற்கப்படும்" என்றார் அமைச்சர்.