கேரளாவில் தாய் மதத்துக்கு திரும்பும் மதமாற்ற நிகழ்ச்சிகள் தொடரும் என்று விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில வி.எச்.பி. பொதுச் செயலாளர் பார்கவ ராம் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
வேற்று மதத்தை தழுவியவர்கள் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பி வருகின்றனர். அவர்களில் யாரையும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யவில்லை. அவர்களாகவே விரும்பி தாய் மதத்துக்கு திரும்பி வருகின்றனர்.
வரும் ஜனவரி 1-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் இந்து மதத்துக்கு திரும்புகின்றனர். இந்த மதமாற்ற நிகழ்ச்சி புதிது அல்ல. ஆனால் காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்து இதனை பிரச்சினையாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கேரளாவில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இந்து மதத்துக்கு திரும்பினர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வி.எச்.பி. சார்பில் ‘கர் வாப்ஸி’ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.