காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பயன்படுத்திய உணவுப் பொட்டலங்களில் பாகிஸ்தான் தயாரிப்பு அடையாளம் இருப்பது தெரியவந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 13 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாயினர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
மேலும் 3 இடங்களில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்களில் 2 பேரும், இரண்டு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்க பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடு ருவிய தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களை நடத்தியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தீவிரவாதிகள் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட உணவுப் பொட்டலங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, "தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கிடந்த தீவிரவாதிகளின் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட உணவுப் பொட்டலங்களில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளது. பொதுவாக, இத்தகைய உணவுகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்துவர்.
தீவிரவாதிகள், அதிக அளவில் உணவுப் பொருட்கள், ஆயுதங்கள் ஆகியனவற்றை கொண்டுவந்திருப்பதை பார்க்கும்போது அவர்கள் நீண்ட நேரம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம்.
சம்பவ இடத்திலிருந்து உணவுப் பொட்டலங்களைத் தவிர ஏ.கே. ரக துப்பாக்கிகள், மேகசின்கள், ஷாட்கன்கள், இரவு நேரத்தில் துல்லியமாக இலக்கை கண்டுபிடிக்கக்கூடிய பைனாக்குலர்கள், கையெறி குண்டுகள், முதலுதவிப் பெட்டிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.