இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 6 குழந்தைகள் பலி

பிடிஐ

உத்தரப்பிரதேச மாநிலம் மவ் மாவட்டத்தில் ஆளில்லா ரயில் கிராசிங்கை நேற்று கடக்க முயன்ற பள்ளி வேன் மீது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஏ.கே. சுக்லா கூறியதாவது:

ஹாஜிபூரில் உள்ள டிடி கான்வென்ட் பள்ளியைச் சேர்ந்த வேன், 15 குழந்தைகளுடன் ராணிபூர் பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

மகாசோ என்ற இடத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கை கடக்க முற்பட்டபோது, அசம்காரிலி ருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த தம்சா பயணிகள் ரயில், வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 குழந்தைகளும் மற்றொரு குழந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்த குழந்தைகள் 4 முதல் 5 வயதுடையவர்கள். மற்ற இருவரின் அடையாளம் தெரியவில்லை என்றார்.

விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பெரிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அமைச்சர் பிரவு கூறும்போது, “ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் நிறுத்தி நிதானித்து வேனை டிரைவர் ஓட்டி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் துயர விபத்து நிகழ்ந்துவிட்டது. இப்போதைய கணக்குப்படி நாட்டில் 11 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் உள்ளன. இவற்றில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பின்னர் டெல்லியிலிருந்து விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அமைச்சர் பிரபு புறப்பட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT