இந்தியா

பாதுகாப்பு விவரம் கோரிய மோடி மனைவியின் ஆர்.டி.ஐ. மனு நிராகரிப்பு

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்னுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்த விவரங்களை ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தெரிவிக்க இயலாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஐ. சட்டத்தில் தகவல் கோரியிருந்தார்.

அவரது மனுவில், "நான் பிரதமரின் மனைவி. அந்த வகையில் எனக்கு என்னென்ன சலுகைகள் உள்ளன. நான் பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறேன். ஆனால், எனது பாதுகாவலர்கள் அரசு வாகனங்களில் என்னை பின் தொடர்கின்றனர்.

என்னைச் சுற்றி பாதுகாப்பு வளையம் இருப்பதால் சில நேரங்களில் அச்சப்பட வேண்டியுள்ளது. எனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் அவர் கோரியிருந்த தகவல்களை அவருக்கு தெரிவிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குஜராத்தின் மெஹாசனா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜே.ஆர். மொதாலியா கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் கோரியுள்ள தகவல்கள் உள்ளூர் புலனாய்வுப் பிரிவுக்கு சம்பந்தப்பட்டது. அதனால் தகவல்களை அவருக்கு தெரிவிக்க இயலாது. இது தொடர்பான விளக்கம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

யசோதா பென்னுக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவுக்கான பதில் விவரத்திலும் இதே தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT