பாஜகவின் நிர்வாக அமைப்பில் மீண்டும் மாற்றம் செய்யவிருக் கிறார் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. இதன் தாக்கத் தால் மத்திய அமைச்சரவையிலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மக்களவை தேர்தலின் வெற்றிக்கு பின் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதால் பாஜகவின் புதிய தேசியத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டவர் அமித் ஷா. இவர் பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே கட்சியின் நிர்வாகத்தில் மாற்றம் செய்தார். அதில், சிலர் மத்திய அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டதால், தேசிய நிர்வாகி கள் 2-வது முறையாக மாற்றி யமைக்கப்பட உள்ளனர்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற கட்சியின் கொள்கையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பாஜகவில் மொத்தம் உள்ள 11 தேசிய துணைத் தலைவர்களில் முக்தார் அப்பாஸ் நக்வீ மற்றும் பந்தாரு தத்தாத்ரேயா கடந்த மாதம் மத்திய அமைச்சர்களாக்கப்பட்டு விட்டனர்.
ராஜஸ்தானின் எம்.எல்.ஏவாக இருந்த மற்றொரு துணைத் தலைவரான கிரண் மஹேஷ்வரி மாநில அமைச்சராகி இருக்கிறார். தேசிய செயலாளர்களான ஜே.பி.நட்டா, ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் ராம் சங்கர் கத்தரியா ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர். இதனால், அவர்களை கட்சியின் நிர்வாகிகள் பதவியில் இருந்து விலக்கிவிட்டு அந்த இடங்களில் வேறு தலைவர்களை நியமிக்க அமித் ஷா முடிவு செய்துள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் அக்கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “இந்த மாற்றம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஆட்சி அமைந்த பின் உடனடியாக செய்யப்படும். மத்திய அமைச்சர் களில், ராவ்சாஹேப் தாதாராவ் தான்வேவை மஹாராஷ்டிர மாநிலத் தலைவராக்கவும், நஜ்மா ஹெப்துல்லாவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய ஆளுநராக்க வும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால், அமைச்சரவையிலும் மாற்றம் வரலாம்” என்றனர்.
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்ட ராஜீவ் பிரதாப் ரூடி தமிழகத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், மத்திய அமைச்சரவை விரிவாக்கத் தில் ரூடி, இணை அமைச்சராக் கப்பட்டார். இதனால், தமிழகப் பொறுப்பாளர் பணி முரளிதர் ராவிடம் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது