ஜம்மு காஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) பாரதிய ஜனதா கட்சி இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிடிபி கட்சியின் முப்தி முகமது சையதுக்கு முதல்வர் பதவியும், பாஜகவுக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக பிடிபி கட்சி வட்டாரம் கூறியிருப்பதாவது:
பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுதொடர்பாக விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிடிபி கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையதுக்கு முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும். பிடிபி கட்சியைச் சேர்ந்த 6 பேரும் பாஜகவைச் சேர்ந்த 8 பேரும் கேபினெட் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள். இந்த ஏற்பாடு சட்டப்பேரவையின் பதவிக் காலமான 6 ஆண்டுகளுக்கும் நீடிக்கும். இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, “ஜம்மு காஷ் மீரில் எங்களுடைய நேரடி பங் களிப்பு இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைக்க விரும்பவில்லை” என பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிடிபி, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை மெகா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். பிடிபி தலைவர் சையதுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் பேசியதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
87 உறுப்பினர்கள் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவையில் பிடிபி 28, பாஜக 25, தேசிய மாநாட்டுக் கட்சி (என்.சி.) 15, காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் அந்த மாநில அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது.
தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு பிடிபி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு மாநில ஆளுநர் என்.என்.வோரா தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார். வரும் ஜனவரி 16-ம் தேதியுடன் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது.