இந்தியா

கார் முன் இருக்கையில் அமர்ந்த தலித் அதிகாரி சுட்டுக்கொலை: உடனடி நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

செய்திப்பிரிவு

பிஹாரில் காரின் முன் இருக்கையில் அமர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் தலித் என்பதால் அவரை, சக துணை ஆய்வாளர் ஒருவரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். ஓராண்டாக தலைமறைவாக உள்ள அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள அஜய் குமார் சிங் யாதவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு சரண் சரக காவல் துறை டிஐஜி மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 2015 ஜனவரி 31-ம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறும் காவல் துறைக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கொல்லப்பட்ட கிருஷ்ண பைதாவின் குடும்பத்தின ருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு சரண் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில உள் துறையை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத் (கொடுமை தடுப்பு) திருத்தத்தின்படி பைதாவின் வாரிசுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரண் மாவட்டத்தில் உள்ள பனியாபூர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் அஜய் குமார் சிங் யாதவ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தக் காரில் முன் இருக்கையில் அமர்ந்த அதே காவல் நிலைய துணை ஆய்வாளர் கிருஷ்ண பைதாவை தலித் என்ற காரணத்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இதுகுறித்து பைதாவின் மகன் சுரேந்திர குமார் ரஜக் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கால தாமதமாக வழக்கு பதிவு செய்தபோதும், யாதவ் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனினும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் தலைமறைவாக உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் ரஜக் புகார் செய்துள்ளார். இதையடுத்து, யாதவ் மீதான புகார் குறித்து விசாரித்து வருவதாக சரண் சரக டிஐஜி மனித உரிமை ஆணையத்தில் கூறியுள்ளார். முக்கியமான இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT