உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்தாததைக் கண்டித்து ஆசிரியர் அடித்ததில் 7 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி எம்.பி. சிங் கூறியதாவது:
பரெய்லி நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நங்காரா கிராமத்தைச் சேர்ந்த ஆரஜ் (7) படித்து வந்தான். கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இந்த மாணவனின் தலையைப் பிடித்து அவனது ஆசிரியர் சுவரில் மோதியுள்ளார். இதனால் அவனது மூக்கிலிருந்து ரத்தம் வந்ததால் பள்ளி நிர்வாகத் தினர் அந்த மாணவனை மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே அவனது பெற்றோரை தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகத்தினர், ஆரஜுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதித் துள்ளதாகவும், அவனை அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளனர். பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றபோது சுயநினைவின்றி இருந்த ஆரஜ், சற்று நேரத்தில் இறந்தான். இந்நிலையில் அந்த மாணவன் தலையில் பலமாக அடிபட்டதாலேயே இறந்துள்ளான் என உடல்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு சிங் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆரஜ் பெற்றோர் மற்றும் அவனது கிராமத்தைச சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியின் முதல்வரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, பள்ளியின் மேலாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
பள்ளிக் கட்டணம் செலுத்தாதது மற்றும் வீட்டுப் பாடங்களை செய்யாதது ஆகிய காரணங்களுக்காக ஆரஜின் தலையைப் பிடித்து அவரது ஆசிரியர் சுவரில் மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பரெய்லி மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.