இந்தியா

ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்டில் நாளை 2-ம் கட்ட தேர்தல்

பிடிஐ

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 2-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீரில் 18 தொகுதிகளுக்கும் ஜார்க்கண்டில் 20 தொகுதிகளுக்கும் இந்த தேர்தல் நடக்கிறது.

இந்தத் தொகுதிகளில் பல்வேறு கட்சித் தலைவர்கள் நடத்திய அனல்பறக்கும் பிரச்சாரம் நேற்று முடிவடைந்தது. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தில் தீவிரமாக செயல்பட்ட சஜத் லோனே மற்றும் 4 மாநில அமைச்சர்கள் 2 கட்டத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவர்கள் ஆவர்.

ஜம்முவில் 9 தொகுதிகளும் காஷ்மீரில் 9 தொகுதிகளும் நாளை தேர்தலை எதிர்கொள் கின்றன. மொத்தம் 175 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13.35 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 2-ம் கட்ட தேர்தலுக்காக உதம்பூர், பூஞ்ச் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியும் பூஞ்ச்சில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தனர்.

முதல்வர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முப்தி முகம்மது சய்யீத் உள்ளிட்டோரும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் 16 தொகுதிகள் பழங்குடியினருக்கான ரிசர்வ் தொகுதிகளாகும். 35 பெண்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் முன்னாள் முதல்வர்கள் அர்ஜுன் முண்டா, மதுகோடா மற்றும் 3 அமைச்சர்கள் முக்கியமானவர்கள்.

SCROLL FOR NEXT