தமிழக எல்லை அருகே அமைந்துள்ள பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள கேரள வனத்துறை அலுவலகங்கள் மீது மாவோயிஸ்ட்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
மேலும், கே.எப்.சி, மற்றும் மெக்டொனால்டு ஆகிய இரு கடைகளின் மீதும் தாக்குதல் நடத்தினர். கேரள மாநிலத்தில் கடந்த இரு வாரங்களில் மாவோயிஸ்ட்கள் அடுத்தடுத்து சில தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கொச்சி, வயநாடு ஆகிய இடங்களில் அவர்கள் தாக்குதலை நடத்தினர்.
வயநாடு மாவட்டம் வெள்ள முண்டா வனப்பகுதியில், அதிரடிப் படையினருக்கும் மாவோயிஸ்ட் களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
வன அலுவலகங்கள் சூறை
இந்நிலையில், தமிழக எல்லையில் அமைந்துள்ள பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள முக்காலி வனச்சரக அலுவலகத்துக்குள் நேற்று புகுந்த மாவோயிஸ்ட்கள் அங்கிருந்தவற்றை அடித்து நொறுக்கினர். சைலன்ட் வேலி தேசிய பூங்காவுக்கு உட்பட்ட இப்பகுதியில் பழங்குடியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
அலுவலகத்தின் முன்பக்கக் கதவை உடைத்துத் திறந்த மாவோயிஸ்ட்கள் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், தொலை பேசி, பிரின்டர் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். அங்கி ருந்த ஆவணங்கள் மீது மண்ணெண் ணெய் ஊற்றித் தீ வைத்தனர்.
இத்தாக்குதல் இரவு 1 மணிக்கு நடைபெற்றதால் வனத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லை. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில், துண்டுப் பிரசுரங்களும், சுவரொட்டிகளும் வீசப்பட்டிருந்தன.
இதேபோன்று, வயநாடு மாவட்டம் வெள்ளமுண்டாவில் உள்ள வன சம்ரக் ஷன சமிதி எனும் வனத்துறை சோதனைச் சாவடியையும் மாவோயிஸ்ட்கள் அடித்து நொறுக்கி, அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர்.
மெக்டொனால்டு கே.எப்.சி. மீது தாக்குதல்
மற்றொரு சம்பவத்தில், பாலக்காடு - கோவை சாலையில் சந்திராநகர் பகுதியிலுள்ள கே.எப்.சி. உணவு விடுதி மற்றும் மெக்டொனால்டு உணவு விடுதி ஆகியவற்றையும் மாவோ யிஸ்ட்கள் அடித்து நொறுக்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக, 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வயநாடு ஆட்சியர் கேச வேந்திர குமார் கூறும்போது, “துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டி களில் உள்ள வாசகங்கள், இத்தாக்கு தலின் பின்னணியில் மாவோ யிஸ்ட்கள் இருப்பதை உறுதி செய் கின்றன. உடனடியாக தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது” என்றார்.
கே.எப்.சி, மெக்டொனால்டு உணவகங்கள் அருகே கிடந்த துண்டுப் பிரசுரங்களில் அமெரிக் காவுக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. வனத்துறை அலுவலகம் அருகே கிடந்த பிரசுரங் களில், ஆதிவாசி மக்களின் நலனுக்காக ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் இணையும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டி ருந்தது.
கோவை எல்லையில் தேடுதல் வேட்டை
இந்த தாக்குதல் சம்பவங்களின் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையில் கேரளத்தை ஒட்டி அமைந்துள்ள கோவை மாவட் டத்தில் 6 இடங்களில் சோதனைச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கூறினார்.