பிரபல இந்தி நடிகர் ஆமிர் கான் நடித்து வெளிவந்துள்ள `பிகே' படத்தைத் தடை செய்யக்கோரி பஜ்ரங் தள் அமைப்பினர் நேற்று அகமதாபாத், போபால் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 24 திரையரங்கங்களைச் சூறையாடினர்.
இதுகுறித்து அகமதாபாத் நகர பஜ்ரங்தள் தலைவர் ஜ்வலித் மேத்தா கூறும்போது, "'பிகே' திரைப்படத்தில் இந்துக் கடவுள்களைக் கேலி செய்துள்ளனர். ஆமிர் கான் ஏன் தன் சொந்த மதமான இஸ்லாமை கிண்டலடிக்கவில்லை? அவர் இஸ்லாமியராக இருப்பதால் இந்துக் கடவுள்களைக் கேலி செய்துள்ளார்.
எனவே அந்தப் படத்தைத் திரையிடக் கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தோம். ஆனால் அதனை மீறி அவர்கள் திரையிட்டார்கள். எனவே அந்தத் திரையரங்கங்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்குப் பிறகு இத்திரைப்படம் திரையிடப்படுவதை நிறுத்த வேண்டும். அல்லது அதை நிறுத்துவதற்கு நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்" என்றார்.
இந்தத் திரையரங்கங்களைச் சூறையாடியவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. ரகசிய கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதேபோன்ற தாக்குதல் சம்பவங்கள் ஆக்ராவில் நடைபெற்றுள்ளன. இந்தத் தாக்குதல்கள் குறித்து ஏற்கெனவே ஆமிர் கான் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த கருத்தில், `எல்லா மதங்களையும் தான் மதிப்பதாகவும், இத்திரைப்படத்தில் இந்துக் கடவுள்களைக் கொச்சைப்படுத்தவில்லை' என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.