இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர். அந்துலே காலமானார்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அப்துல் ரகுமான் அந்துலே (85) மும்பையில் நேற்று காலமானார்.

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட்டில் 1929 பிப்ரவரி 9-ம் தேதி ஏ.ஆர். அந்துலே பிறந்தார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற அவர் காங்கிரஸில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமான அவர், மகாராஷ்டிர முதல்வர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

2009 மக்களவைத் தேர்தலின்போது ராய்காட் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகினார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது ராய்காட் தொகுதி தேசியவாத காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த அவர் விவசாயிகள்-தொழிலாளர் கட்சி வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். இறுதியில் சிவசேனாவின் ஆனந்த் கீதே, ராய்காட் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதய கோளாறு, சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த ஏ.ஆர். அந்துலே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு நேற்று காலை அவர் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு ராய்காட்டில் உள்ள அவரது சொந்த ஊரான ஆம்பெட்டில் இன்று நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT